

புதுடெல்லி:
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள 3வது வகை கொரோனா வைரஸ் காரணமாகவே, 2வது அலையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளால், தங்கள் நாட்டுக்குள் இந்த கொரோனா நுழைந்து விடக்கூடாது என வெளிநாடுகள் பீதி அடைந்துள்ளன. இதனால், இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதை தடுப்பதற்காக, இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே, மாலத்தீவு, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, ஈரான், தாய்லாந்து, வங்கதேசம், குவைத், இந்தோனேசியா, பிரிட்டன், ஓமன், ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய், பாகிஸ்தான் உட்பட 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
பல அண்டை நாடுகள் இந்தியா உடனான எல்லையை மூடி விட்டன.
இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளையும் படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இதற்காக கடந்த 24ம் தேதி அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவு இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி முடிவுக்கு வந்தது.இதனை மே 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 80 சதவீதம் வரை மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த விமானப் போக்குவரத்து நிறுவனமும் பேரிடர் காலத்தில் நூறு சதவீத சேவையை தொடங்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.