

புதுடெல்லி,
அசாம் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவருடைய காரில் மின்னணு வாக்கு எந்திரம் இருந்ததாக வீடியோ படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின. இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பரவி உள்ள வீடியோவும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது;-
ஒவ்வொரு தடவையும் தேர்தல் நடக்கும் போது இதுபோன்ற சம்பவம் நடந்து வருகின்றன. தற்போது மின்னணு வாக்கு எந்திரம் இருந்ததாக கூறப்படும் கார் பா.ஜனதா வேட்பாளருடையதாக இருக்கலாம். அல்லது அவருடைய ஆதரவாளருடைய காராக இருக்கலாம்.
ஆனால் இதை மறுப்பார்கள். இதை வெளிப்படுத்திய நபரை பா.ஜனதாவின் ஊடகங்கள் திருப்பி குற்றம்சாட்டும். அவருக்கு தீங்கு இழைக்கப்படும். இதுபோல பல குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே பதிவானாலும் அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதைய புகாரில் தேர்தல் ஆணையம் தீர்க்கமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.