100 நாள் வேலைத்திட்ட பணியில் தொடர அனுமதி: தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

100 நாள் வேலைத்திட்ட பணியில் தொடர அனுமதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கடந்த தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13,500 மக்கள்நலப்பணியாளர்கள் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்தும், மீண்டும் பணி வழங்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மக்கள் நலப்பணியாளர்களை 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்தது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்வதாகவும், 100 நாள் வேலைத்திட்ட பணியில் தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் தனராஜ் சார்பில் வக்கீல் கே.பாரிவேந்தன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மறுஆய்வு மனுவில், தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமையை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்த மக்கள் நல பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com