

புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல்களுக்கான சமூக நீதிப்பேரவை தலைவர் கே.பாலு, தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அதனை உடனடியாக மூட வேண்டும். அதுபோல வகைமாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது என்று கூறி இருந்தனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு 2017 ஜூலை 17-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து மாநிலங்களும் உள்ளாட்சி பகுதிகள் வழியாக செல்லும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதே போல தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட போது மட்டும் சென்னை ஐகோர்ட்டு இது தொடர்பான தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது. ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் திடீரென்று மூடப்படுவதால் ஏராளமான ஊழியர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
மேலும் மது அருந்திவிட்டு சாலைகளில் வண்டி ஓட்டுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சாலை விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.