

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல்களின் போது ஒரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாற்று கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அந்தவகையில் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டும் பல பிரபலங்கள் கட்சித்தாவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதில் பலர் புதிய கட்சிகளில் சீட் பெற்று போட்டிக்களத்திலும் குதித்தனர்.
இவ்வாறு போட்டியிட்ட 75-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் சுமார் 47 பேர் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இதில் முக்கிய தலைவர்களும் அடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் முக்கியமாக பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்கா, காங்கிரசில் இணைந்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வியடைந்தார்.
இதைப்போல ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள முன்னாள் தலைவர் சரத் யாதவ் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரசின் தாரிக் அன்வர், பா.ஜனதாவின் கீர்த்தி ஆசாத், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா ஆகியோரும் தோல்வியை தழுவினர்.
அதேநேரம் புதிய கட்சி சார்பில் போட்டியிட்ட சிலர் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். இதில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த போஜ்புரி நடிகர் ரவி கிஷன் சுக்லா, மதசார்பற்ற ஜனதாதளத்தில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட கன்வர் தனிஷ் அலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.