இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு; மராட்டிய அரசுக்கு கடும் எதிர்ப்பு

20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ஏன் ரூ.11 கோடி பரிசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு; மராட்டிய அரசுக்கு கடும் எதிர்ப்பு
Published on

மும்பை,

20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, வீரர்கள் சூர்யகுமார் யாதவ், சிவம் துவே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு நேற்று முன்தினம் சட்டசபையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்தநிலையில் மாநில அரசின் கருவூலத்தில் இருந்து இந்திய அணிக்கு ஏன் பரிசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இது குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறியதாவது:-இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக நாங்களும் பெருமை கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ஏன் பரிசு கொடுக்க வேண்டும்?. அரசு கருவூலம் காலியாகி ஏழை மக்கள் சாகட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே கூறுகையில், "அரசு கருவூலத்தில் இருந்து வீரர்களுக்கு ரூ.11 கோடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய அணியின் சாதனைக்காக எல்லோரும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு தேவையான அளவு பரிசு தொகை வழங்கப்பட்டு விட்டது. ரூ.11 கோடியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த பணத்தில் இருந்து வழங்க வேண்டும்" என்றார். இந்திய அணியினருக்கு பரிசு அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியல் ஆக்குவதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com