வேளாண் சட்ட விவகாரத்தில் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு கூச்சலுக்கு மத்தியிலும் மசோதாக்கள் நிறைவேறின

வேளாண் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திபோடப்பட்டன. கூச்சல், குழப்பத்துக்கு மத்தியிலும் மசோதாக்கள் நிறைவேறின.
வேளாண் சட்ட விவகாரத்தில் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு கூச்சலுக்கு மத்தியிலும் மசோதாக்கள் நிறைவேறின
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 8-ந்தேதி தொடங்கியது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகிய எரிபொருள் விலை உயர்வு பிரச்சினை விசுவரூபம் எடுத்து, இரு அவைகளும் அமளியால் முடங்கி வந்தன.

இந்த நிலையில், நேற்று மக்களவை காலை 11 மணிக்கு கூடிய உடனேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷங்களை முழங்கினர். டெல்லி எல்லையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி செலவின மசோதாக்கள் மற்றும் நிதி மசோதாக்கள் விவாதத்தின்போது பேசலாம் என கூறி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறும், இருக்கைகளுக்கு திரும்புமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனாலும் பலன் இல்லை. அமளிக்கு மத்தியிலும் சுமார் 30 நிமிடம் கேள்வி நேரம் நடந்தது.

அதைத்தொடர்ந்து பகல் 12.30 மணிவரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

மீண்டும் சபை கூடியபோது, அமளி தொடர்ந்தாலும், அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவதற்கான தேசிய தலைநகர் டெல்லி சட்டங்கள் (சிறப்பு விதிகள்) இரண்டாவது (திருத்தம்) மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மாநிலங்களவையில் ஏற்கனவே பிப்ரவரி 9-ந்தேதி நிறைவேறி விட்டது. டெல்லியில் அங்கீகரிக்கப்படாத 1,500 காலனிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா நிறைவேறிய பின்னர் அமளி தொடர்ந்தபோது சபை பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது ரெயில்வே துறைக்கான மானியக்கோரிக்கை மீது பா.ஜ.க. எம்.பி. ராம்கிருபால் யாதவ் பேசத்தொடங்கினார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி முழங்கினர். அப்போது நிலவிய அமளியால், சபாநாயகர் இருக்கையில் இருந்து சபையை நடத்திய மீனாட்சி லேகி, சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இன்று (வியாழக்கிழமை) சிவராத்திரி விடுமுறை, வியாழக்கிழமை விடுமுறை வந்தால் வெள்ளிக்கிழமை வார இறுதிக்கு முந்தைய நாளாக இருப்பதால், அதையும் விடுமுறை நாளாக அறிவிக்கும் விதி உள்ளது. சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் விடுமுறை. எனவே மக்களவை மீண்டும் 15-ந்தேதிதான் கூடும்.

மாநிலங்களவையிலும் வேளாண் சட்டங்களை திரும்பபெற கோரும் விவகாரம் புயலைக்கிளப்பியது. எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விதி எண்.267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், அப்படி செய்யாவிட்டால் நாங்கள் செயல்பட மாட்டோம் என்று கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷங்களை போட்டனர்.

ஆனால் செலவின மசோதாக்கள், நிதி மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது விவாதிக்கலாம் என சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியும் உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்பாமல் அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சபை 12 மணிவரை ஒத்திபோடப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும் நிலைமையில் மாற்றம் ஏற்படாததால் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சபை கூடியபோது, கூச்சலுக்கு மத்தியிலும் நடுவர் மற்றும் சமரச (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, ஒரு ஒப்பந்தம் மோசடியால் அல்லது ஊழலால் தூண்டப்பட்ட நிலையில், நடுவர் மன்றம் வழங்குகிற தீர்ப்பை அமல்படுத்துவதை தடை செய்யும் வாய்ப்பு அனைத்து தரப்பினருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது. மக்களவையில் இந்த மசோதா கடந்த மாதம் 12-ந்தேதி நிறைவேறி விட்டது.

இந்த மசோதா நிறைவேறிய பின்னர் 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷங்களை முழங்கி அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சபையை 15-ந்தேதி வரை ஒத்திவைத்து துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com