பஞ்சாப் விவசாயிகளை தடுத்த அரியானா அரசுக்கு அமரிந்தர் சிங் கண்டனம்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகளை தடுத்த அரியானா அரசுக்கு அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பஞ்சாப் விவசாயிகளை தடுத்த அரியானா அரசுக்கு அமரிந்தர் சிங் கண்டனம்
Published on

சண்டிகர்,

மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக டெல்லி நோக்கி அவர்கள் பேரணி தொடங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் வாகனங்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

ஆனால் இந்த பேரணி தங்கள் மாநிலத்துக்குள் நுழைய அரியானாவின் பா.ஜனதா அரசு தடை விதித்தது. இந்த பேரணியை முன்னிட்டு நேற்று முன்தினமே தனது மாநில எல்லைகளை அரியானா அரசு மூடி சீல் வைத்தது.

எனினும் பஞ்சாப் மாநில விவசாயிகளின் பேரணி நேற்று இரு மாநில எல்லையான சாம்புவை அடைந்தது. அப்போது அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்த அரியானா போலீசார், பஞ்சாப் விவசாயிகளை உள்ளே விட மறுத்தனர். தடுப்பு வேலிகளை வைத்து சாலைகளை அடைத்து இருந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில விவசாயிகள், போலீசாரின் தடுப்பு வேலிகளை தூக்கி அருகில் உள்ள காக்கர் நதியில் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். ஆனாலும் விவசாயிகள் திரும்பி செல்லவில்லை. இதனால் நீண்ட நேரமாக சாம்பு எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதலும், கைகலப்பும் ஏற்பட்டது.

பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றனர். அவர்கள் அரியானா எல்லைக்குள் புகுந்து டெல்லி நோக்கிய தங்கள் பேரணியை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் தங்கள் மாநில விவசாயிகளை அரியானா எல்லையில் தடுத்து நிறுத்திய அந்த மாநில அரசுக்கும், முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாருக்கும் பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களாக பஞ்சாப்பில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரியானா அரசு படைகளை ஏவி ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது ஏன்? ஒரு பொது நெடுஞ்சாலை வழியாக விவசாயிகள் அமைதியாக கடந்து செல்ல அவர்களுக்கு உரிமை இல்லையா?

அரியானாவின் கட்டார் அரசு ஏன் விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்கிறது? அமைதியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது படைகளை பயன்படுத்தி கடுமையாக நடந்திருப்பது ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும்.

விவசாயிகளின் அரசியல்சாசன உரிமை இவ்வாறு சிதைக்கப்பட்டிருப்பது, அரசியல்சாசன தினத்தில் நடந்திருக்கும் மோசமான நிகழ்வாகும். அவர்கள் தங்கள் குரலை டெல்லியில் எழுப்புவதற்கு விட்டு விடுங்கள். பா.ஜனதாவின் மாநில அரசுகள் இத்தகைய கடுமையான போக்கை கடைப்பிடிப்பதை விட்டுவிடச்சொல்லி கட்சித்தலைமை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமரிந்தர் சிங் கூறியிருந்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் பேரணியை தடுத்து நிறுத்திய விவகாரம் பஞ்சாப்-அரியானா மாநில அரசுகளிடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசின் கொடுமையை எதிர்கொண்டு விவசாயிகள் உறுதியுடன் நிற்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இதைப்போல, விவசாயிகள் தடுக்கப்பட்ட விவகாரம் ஜனநாயக படுகொலை என பஞ்சாப் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com