இந்து - முஸ்லிம்களின் வாழ்வில் விரிசலை உருவாக்கும் முயற்சி தொடருகிறது: பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் வேதனை!

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பின்னரும் மக்களை சிறையில் அடைக்கும் நடைமுறை தொடர்கிறது என்று பேசினார்.
இந்து - முஸ்லிம்களின் வாழ்வில் விரிசலை உருவாக்கும் முயற்சி தொடருகிறது: பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் வேதனை!
Published on

கொல்கத்தா,

'ஆனந்தபஜார் பத்திரிகா' நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாக 88 வயதான புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

முதன்முதலாக, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் 'ஆனந்தபஜார் பத்திரிகா' என்ற வட்டார மொழி நாளிதழின் முதல் பதிப்பு மார்ச் 13, 1922 அன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதன்நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியதாவது:-

1922 இல், நம் நாட்டில் பலர், அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகும், இன்னும் இந்த பயிற்சி இன்னும் நடைமுறையில் உள்ளது.

இந்தியர்களை பிளவுபடுத்தும் முயற்சி... அரசியல் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக, இந்து மற்றும் முஸ்லிம்களின் சகவாழ்வில் விரிசலை உருவாக்குகிறது. நீதியின் பாதையைத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நான் அப்போது மிகவும் இளமையாக இருந்தேன், எந்தக் குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பும் இந்த வழக்கம் எப்போதாவது நிறுத்தப்படுமா என்று அடிக்கடி கேள்வி எழுப்புவேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும், அரசியல் காரணங்களுக்காக மக்களை சிறையில் அடைக்கும் காலனித்துவ நடைமுறை இன்னும் தொடர்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்த அமர்த்தியா சென், நாட்டு மக்கள் ஒற்றுமையைப் பேணுவதற்கு உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com