ரூ.2,800 கோடி முதலீட்டில் அதிவேக டெலிவரி சேவையை வழங்க அமேசான் திட்டம்

அத்தியாவசிய பொருட்களை சில நிமிடங்களிலேயே டெலிவரி செய்வது இதன் நோக்கமாகும்.
ரூ.2,800 கோடி முதலீட்டில் அதிவேக டெலிவரி சேவையை வழங்க அமேசான் திட்டம்
Published on

பெங்களூரு,

அமேசான் நிறுவனம் 'Amazon Now' என்ற அதிவேக டெலிவரி சேவையை இந்தியாவில் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளது. 1000-க்கும் மேற்பட்ட சிறு டெலிவரி சேவை மையங்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை வலுப்படுத்த ரூ. 2,800 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தியா முழுவதும் சில நிமிடங்களில் பொருள்களை டெலிவரி செய்யும் முறைக்கு ஆன்லைன் நிறுவனங்களிடையே போட்டிகள் பெருகிவரும் நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்தத் திட்டம் அதிவேக டெலிவரி சந்தையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'அமேசான் நவ்' சேவை தற்போது மும்பை, தில்லி, பெங்களூரு நகரங்களில் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் விரைவில் கொச்சி, அமிர்தசரஸ், மங்களூர், விசாகப்பட்டினம், லக்னௌ, புனே, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் போன்ற மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சேவையின் மூலம் தினசரி தேவைக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள், அழகு சாதனங்கள், காய்கறிகள், பழங்கள், சிறு உபகரணங்கள், குழந்தைகளுக்கானப் பொருள்கள், வளர்ப்புப் பிராணிகளுக்குத் தேவையானப் பொருள்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருள்கள் நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000-க்கும் மேற்பட்ட சிறு டெலிவரி சேவை மையங்களின் ஆதரவுடன் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், அமேசான் நவ் சேவை மூலம் 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்களில் டெலிவரி, அன்றைய தினமே டெலிவரி, ஒரே நாளில் டெலிவரி என பல்வேறு முறைகளில் தொடர்ந்து பொருள்களை வாங்கி வருகின்றனர். இதில், 'அமேசான் நவ்' பயன்படுத்தும் ப்ரைம் உறுப்பினர்கள் முன்பைவிட மூன்று மடங்கு அதிகமாக ஆன்லைன் மூலம் பொருள்களை ஆர்டர் செய்து நிமிடங்களில் டெலிவரி பெறுவதாக அமேசான் குறிப்பிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com