அம்பன் புயல்; மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு

ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அம்பன் புயல்; மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு
Published on

கொல்கத்தா,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கடந்த 20ந்தேதி மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இந்த புயலுக்கு 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என கூறினார். இந்நிலையில், ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com