கொரோனாவால் இறந்தவர் உடலை எடுத்து செல்ல ரூ.60 ஆயிரம் கேட்டு அடம்பிடித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

பெங்களூருவில், கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் ரூ.60 ஆயிரம் கேட்டு அடம்பிடித்தார். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம், இறந்தவரின் மகள் தனது தங்கச்சங்கிலியை கழற்றி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கொரோனாவால் இறந்தவர் உடலை எடுத்து செல்ல ரூ.60 ஆயிரம் கேட்டு அடம்பிடித்த ஆம்புலன்ஸ் டிரைவர்
Published on

பெங்களூரு:

ஆம்புலன்ஸ்

பெங்களூரு மத்திகெரேயை சேர்ந்தவர் பிரசாத்(வயது 55). இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரசாத்திற்கு சிகிச்சை அளிப்பது பற்றி கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பிரசாத்தை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி தனியார் ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு பேசி ஆம்புலன்சை அனுப்பி வைக்க கூறி உள்ளனர். ஆனால் 3 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஹெப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாத் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பீனியாவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ரூ.60 ஆயிரம்

அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் அனுமந்தா என்பவர், பிரசாத்தின் உடலை மின்மயானத்திற்கு எடுத்து செல்ல உறவினர் அமித் என்பவரிடம் ரூ.60 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால தன்னிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை அமித் கொடுத்து உள்ளார். பின்னர் பீனியா மின்மயானத்திற்கு சென்றதும் பிரசாத்தின் மகள் பவ்யா தன்னிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை அனுமந்தாவிடம் கொடுத்து உடலை தகனம் செய்ய எடுத்து செல்ல கூறியுள்ளார். ஆனால் பாக்கி பணத்தையும் தந்தால் தான் உடலை தகனம் செய்ய எடுத்து செல்வேன் என்று அனுமந்தா கூறியதாக தெரிகிறது.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த பவ்யா, தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழற்றி அனுமந்தாவிடம் கொடுத்து அதை விற்று பணத்தை எடுத்து கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் தங்கச்சங்கிலியை வாங்க மறுத்த அனுமந்தா, தனக்கு பணம் தான் வேண்டும் என்று அடம்பிடித்ததாக தெரிகிறது. இதன்பின்னர் அவரிடம் அமித், பவ்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு அடைந்த அனுமந்தா, பிரசாத்தின் உடலை தகனம் செய்ய எடுத்து சென்று உள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com