பக்கோடா கடையை திறக்க எனக்கு உதவிசெய்யுங்கள் ஸ்மிருதி இரானிக்கு வேலையில்லா இளைஞர் கடிதம்!

பக்கோடா கடையை திறக்க எனக்கு உதவிசெய்யுங்கள் என ஸ்மிருதி இரானிக்கு வேலையில்லா இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.
பக்கோடா கடையை திறக்க எனக்கு உதவிசெய்யுங்கள் ஸ்மிருதி இரானிக்கு வேலையில்லா இளைஞர் கடிதம்!
Published on

லக்னோ,

பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு விதத்தில் வேலைவாய்ப்பு தான் என்றும், இதனையும் வேலைவாய்ப்பு உருவாக்கும் விதத்தில் தான் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாணவர்கள் தரப்பில் பக்கோடா விற்பனை செய்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு பக்கோடா கடையை திறக்க உதவிகோரி இளைஞர் ஒருவர் கோரிக்கையை விடுத்து உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஒரு வருடங்களுக்கு முன்னர் பாரதீய ஜனதாவிற்காக சமூக வலைத்தள பிரிவில் பணியாற்றிய இளைஞர் அஷ்வின் மிஸ்ரா, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கும் மோஷின் ராஜாவிற்கும் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் பக்கோடா கடையை திறக்க எனக்கு உதவிசெய்யுங்கள் என இளைஞர் அஷ்வின் மிஸ்ரா கோரிக்கை விடுத்து உள்ளார்.

பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசிய போது அவர் கூறிய யோசனையானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அப்போது முதல் என்னுடைய வேலைதேடும் படலத்தை முடித்துக் கொண்டேன். பிரதமர் மோடியின் யோசனையின்படி செயல்பட்டால் என்னுடைய குடும்பத்திற்கு பணம் மட்டும் சம்பாதிப்பதைவிட பிறருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என உணர்ந்துக்கொண்டேன். இருப்பினும் இதனை செயல்படுத்த என்னிடம் முதலீடு செய்வதற்கு தேவையான பணம் கிடையாது.

தொழில் தொடங்க உதவிக்காக வங்கிகளை அணுகினேன். ஆனால் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் எனக்கு கடன் உதவியை வழங்க எந்தஒரு வங்கியும் முன்வரவில்லை. இருப்பினும் பிரதமர் மற்றும் பிற மந்திரிகள் முத்ரா திட்டத்தின் கீழ் 10 கோடி பேர் பயனடைந்துள்ளதாக கூறிவருகிறார்கள், ஆனால் எனக்கு பணம் வழங்க வங்கிகள் மறுத்தது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பேச்சு பொய்யானது என்று என்னால் நம்ப முடியவில்லை. வங்கிகளில் செயல்பாடு உங்களிடம் சிபாரிசு பெறுவதற்கு கடிதம் எழுத செய்தது.

பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் எனக்கு நிதி உதவி பெற்றுத்தர பிரதமர் மோடியிடம் மந்திரிகளாகிய நீங்கள் சிபாரிசு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன், உதவி கிடைத்தால் என்னால் கடையை தொடங்க முடியும், என அஷ்வின் மிஸ்ரா கடிதத்தில் கூறிஉள்ளார்.

ஏற்கனவே வேலைவாய்ப்பு விவகாரம் மற்றும் பக்கோடா கருத்தால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், இவ்விவகாரமும் அவர்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. சமூக வலைதளங்களில் கடிதம் அரசின் மீதான விமர்சனங்களுடன் பரவி வருகிறது.

அஷ்வின் மிஸ்ராவின் கடிதம் பாரதீய ஜனதாவின் பொய்களை தோலுரித்து காட்டுகிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com