டுவிட்டரில் மோடி அரசை புகழ்ந்து வரும் மீடூ விவகாரத்தில் சிக்கிய மத்திய மந்திரி

பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய மந்திரி அக்பர் மோடி அரசை டுவிட்டரில் புகழ்ந்து வருகிறார்.
டுவிட்டரில் மோடி அரசை புகழ்ந்து வரும் மீடூ விவகாரத்தில் சிக்கிய மத்திய மந்திரி
Published on

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இதில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். இதில் பிரியா ரமணி, கசாலா வகாப், ஷுமா ரகா, அஞ்சு பாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், மந்திரி அக்பர் மீது இன்று கூடுதலாக 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

பெண் பத்திரிகையாளரான துஷிடா பட்டேல் மற்றும் பெண் தொழிலதிபரான சுவாதி கவுதம் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனால் அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள பெண்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரில் அக்பர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 44 பேர் வறுமையில் இருந்து வெளிவருகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. 80 கோடி மக்களை உள்ளடக்கிய தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்திய மோடி அரசுக்கு புகழ் சென்று சேரும்.

ஆனால் காங்கிரஸ் கட்சியால் இதனை காண முடியவில்லை. இந்தியாவின் புகழை கெடுக்கும் பிரசாரத்தினை அது தொடருகிறது என தெரிவித்துள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

அக்பர் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ள நிலையில், அவர் பதவி விலக மறுத்து வருகிறார். பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக அவர் அவதூறு வழக்கை தொடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com