

ராஞ்சி,
ஜார்கண்டில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைத்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் கவர்னர் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார். அதன்படி தானே முன்வந்து நாளை (திங்கட் கிழமை) நம்பிக்கை தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டு உள்ளார். இதற்காக நாளை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், முதல்-மந்திரியின் இந்த விருப்பம் குறிப்பிடப்பட்டு உள்ளது.