

புதுடெல்லி
டெல்லியில் இன்று நடந்த ரெய்சினா பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்திய சமுத்திர பகுதியில் நடந்து வரும் சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார். சமீபத்தில் ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா என்ற ஈரானிய கப்பல் இந்தியாவில் கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பியபோது, சர்வதேச நீர்வழிகளில் அமெரிக்காவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் என்ற மற்றொரு ஈரான் கப்பல் சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பியபோது அதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்தியாவை தொடர்பு கொண்டது ஈரான். இது ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன் நடந்தது.
அப்போது, கொச்சியில், ஈரானின் கப்பலை நிறுத்தி கொள்ள மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என ஜெய்சங்கர் கூறினார். அந்த கப்பலின் 183 ஊழியர்களும் கொச்சி கடற்படை தளத்தில் தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளனர். ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா கப்பல் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.
ஆனால், ஈரான் அரசு எங்களை தொடர்பு கொண்டு, விவரம் கூறி, அந்நாட்டு கப்பலை நிறுத்தி கொள்ள அணுகியபோது, இந்தியா உதவியது. இதுபோன்ற கடினம் வாய்ந்த தருணங்களில், ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் கப்பலை நிறுத்த அவர்கள் அனுமதி கேட்டபோது, சரி நீங்கள் உள்ளே வரலாம் என கூறினோம். சில நாட்கள் பயணித்து கொச்சியில் அக்கப்பல் நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.