அமித்ஷா விவகாரம்: டெல்லி போலீசாரின் சம்மனுக்கு தெலுங்கானா முதல்- மந்திரி ஆஜராகமாட்டார்

அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பிருந்தது.
அமித்ஷா விவகாரம்: டெல்லி போலீசாரின் சம்மனுக்கு தெலுங்கானா முதல்- மந்திரி ஆஜராகமாட்டார்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, அமித்ஷாவின் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரேவந்த் ரெட்டியின் தரப்பில் அவரது வழக்கறிஞர் டெல்லி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com