

கல்பர்கி, (கர்நாடகா),
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமைறைவாகியுள்ளார். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர விசாரணை முகமைகள் பல்வேறு நடவடிக்கைகளை துவங்கியுள்ளன. இந்த சூழலில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறும் போது, ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டபோது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்தனர்.
ஆனால் அந்த பணத்தை லலித்மோடி, நிரவ்மோடி ஆகியோர் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர். பணக்காரர்கள் வாங்கிய வங்கி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அதாவது பணக்காரர்களின் கடனை ரூ.1.40 லட்சம் கோடி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹல் சோக்ஷி ஆகியோர் விவகாரத்தில் பிரதமர் மோடி எந்த கருத்தையும் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மோடி அரசைத்தவிர வேறு எந்த அரசாங்கமும் இது போன்ற மோசடிகளுக்கு எதிராக இவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை துவங்கியது இல்லை. அமலாக்கத்துறை நடவடிக்கையை துவங்கியுள்ளது, சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது என்றார்.