ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!

பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து, காஷ்மீர் தாக்குதல் குறித்தும், இந்தியாவின் சூழல் குறித்தும் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் முதல் ரபேல் போர் விமானங்கள் வரை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ள இந்திய ராணுவம் இந்திய கடற்பரப்பில் போர் கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.