மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு செய்த அமித்ஷா

சட்டம்ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அமித் ஷா உத்தரவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இம்பால்,

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பெரும் கலவரத்திற்கு பிறகு, பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வன்முறை ஓரளவு தணிந்தது. எனினும் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் காங்போப்கி, சுராசந்த்பூர் மாவட்டங்களில் இணையதளம், மொபைல் டேட்டா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி இன்று ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூரில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைநிறுத்தம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.  மேலும் அங்கு கூடிய விரைவில் அமைதி மற்றும் சட்டம்ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே வடகிழக்கு மாநிலத்தின் தற்போதைய "கொந்தளிப்பான" சூழ்நிலையை கையாள்வதில் மாநில அரசுக்கு உதவுவதற்காக சுமார் 5 ஆயிரம் துணை ராணுவப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com