எஸ்.ஐ.ஆர். விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட தயார் - அமித்ஷா

நரேந்திர மோடி அரசானது ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.
சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட தயார் - அமித்ஷா
Published on: 

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கடந்த அக். 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்பட்டு, அதில் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது.

இதுகுறித்து சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா பேசியதாவது:

அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவர்கள் ஒரு மாதிரி நாடாளுமன்றத்தை அமைத்து, விவாதம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றியுள்ளனர். ராகுல் காந்திக்கு ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன். நரேந்திர மோடி அரசானது ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளது.

எஸ்ஐஆர் தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டீர்கள்.

இப்போது, ​​நாடாளுமன்றம் செயல்படவும் முறையான விவாதத்தில் ஈடுபடவும் அனுமதியுங்கள். அப்போது, ​​யார் உண்மையைப் பேசுகிறார்கள், யார் பொய்யைப் பேசுகிறார்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் தாங்களாகவே அறிந்துகொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X