பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான் 3-வது அணி ஆட்சிக்கு வர முடியாது திருநாவுக்கரசர் பேட்டி

மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியது பற்றி கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான் என்றும், 3-வது அணி ஆட்சிக்கு வரமுடியாது என்றும் கூறினார்.
பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான் 3-வது அணி ஆட்சிக்கு வர முடியாது திருநாவுக்கரசர் பேட்டி
Published on

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பிரதான கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவரை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் அவர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், இந்த சந்திப்பு, 3-வது அணி அமைப்பதற்கான சந்திப்பு அல்ல என்று கூறினார். ஆனாலும் இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுப்பதாக அமைந்து இருக்கிறது.

இதுபற்றி டெல்லியில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது.

இந்தியாவில் 3-வது அணியோ, 4-வது அணியோ ஆட்சிக்கு வர முடியாது. பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான். மோடியை மாற்றி பிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல்காந்திதான். கூட்டணி என்று வந்தால் காங்கிரஸ் கூட்டணிதான் பலமாக இருக்கும். ஆனால் பா.ஜனதா தூண்டுதலோடு காங்கிரஸ் பலத்தை குறைக்க உள்நோக்கத்தோடு ஒரு அணி அமையுமானால் அந்த அணி மக்களிடத்தில் வெற்றி பெறாது.

காங்கிரசுடன் வர முடியாத சில கட்சிகள் அந்த அணியுடன் சேர்ந்து செயல்படலாம். ஆனால் தேர்தலுக்கு முன்போ, பின்போ அவர்கள் காங்கிரசைத்தான் ஆதரிக்கப்போகிறார்கள். அவர்களால் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரசால்தான் நிலையான ஆட்சி தர முடியும்.

மு.க.ஸ்டாலின், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து நீக்கும் எண்ணத்தில்தான் வேறுசில மாநில கட்சிகளை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் காங்கிரசை விட்டு விலகுவதாக சொல்லவில்லை.

மம்தா பானர்ஜிக்கும், சந்திரசேகர ராவுக்கும் தமிழ்நாட்டில் கட்சியும் கிடையாது. ஆட்களும் கிடையாது. அதே மாதிரி மேற்கு வங்காளத்திலும், தெலுங்கானாவிலும் தி.மு.க. கிடையாது. எனவே, இவர்கள் கூட்டணி சேருவதால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. இது மு.க.ஸ்டாலினுக்கு தெரியும். எனவே அவர் அப்படி எல்லாம் கூட்டணி அமைக்க மாட்டார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்து இருக்கிறது, அவ்வளவுதான்.

பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் மக்கள் காங்கிரசுக்குத்தான் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் கட்சிதான் முதன்மையான கட்சி. காங்கிரசை முன்னிலைப்படுத்தி அமைகிற கூட்டணிதான் வெற்றி பெறும். அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் சரி.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணியில் வேறு கட்சிகள் சேர விருப்பப்பட்டால் அதுபற்றி யோசிப்போம்.

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி என்று மு.க.ஸ்டாலின் சொன்னது சரிதான். யாருக்கு எத்தனை இடம்? என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com