கடனை திருப்பி கேட்டதால் 'ஹனிடிராப்' முறையில் முதியவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி; பெண் கைது

தாவணகெரேயில், கடனை திருப்பி கேட்டதால் ஹனிடிராப் முறையில் முதியவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடனை திருப்பி கேட்டதால் 'ஹனிடிராப்' முறையில் முதியவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி; பெண் கைது
Published on

சிக்கமகளூரு:

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

தாவணகெரே டவுன் சிவக்குமாரசாமி படாவனே பகுதியை சேர்ந்தவர் சித்தானந்தா(வயது 79). இவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இதேபோல் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் யசோதா(வயது 37). சித்தானந்தாவுக்கும், யசோதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சித்தானந்தாவிடம், யசோதா ரூ.86 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தார்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து கடனை திருப்பி தரும்படி சித்தானந்தா, யசோதாவின் வீட்டிற்கு சென்று கேட்டு வந்துள்ளார். ஆனால் யசோதா சில நாட்களில் தருவதாக கூறி அனுப்பி வைத்துள்ளார்.

ஹனிடிராப் முறையில் மிரட்டி...

இதற்கிடையே சித்தானந்தா, யசோதாவிடம் கடனை உடனே தரும்படி கண்டிப்புடன் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்தானந்தாவை,யசோதா வீட்டிற்கு வரவழைத்து காபியில் போதை மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிதுநேரத்தில் சித்தானந்தா மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து யசோதா, சித்தானந்தாவின் ஆடைகளை கலைந்து அவருடன் நெருக்கமாக இருப்பது போன்று தனது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து சித்தானந்தா மயக்கம் தெளிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதைதொடர்ந்து சித்தானந்தா, யசோதாவிடம் கடனை கேட்டுள்ளார். அப்போது யசோதா, சித்தானந்தாவிடம் நீங்கள் என்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளது என்று கூறி அவரது செல்போனுக்கு புகைப்படம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் உறவினர்களுக்கு வீடியோ, புகைப்படத்தை அனுப்பாமல் இருக்க கடனை திருப்பி கேட்பதையும் நிறுத்தும்படியும், ரூ.15 லட்சம் தரும்படியும் ஹனிடிராப் முறையில் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சித்தானந்தா, ரூ. 8 லட்சம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு யசோதா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கைது

இதனால் சித்தானந்தா, தனது மகனிடம் நடந்த விஷயத்தை கூறினார். இதையடுத்து மகன், தாவணகெரே கே.டி.ஜி. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யசோதாவை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com