திருப்பதியில் மின்சார பஸ்சை மர்மநபர் கடத்திச்சென்றதால் பரபரப்பு

திருமலையில் இருந்து பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யும் ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்சை மர்மநபர் கடத்தி சென்றார்.
திருப்பதியில் மின்சார பஸ்சை மர்மநபர் கடத்திச்சென்றதால் பரபரப்பு
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், பக்தர்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.

அந்த இலவச மின்சார பஸ்களில் ஒரு பஸ்சை நேற்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள ஹில்ஸ் வீவ் காட்டேஜ் தங்கும் விடுதி அருகே நிறுத்தி விட்டு, அதன் டிரைவர் டீ குடிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது, மின்சார பஸ்சை காணவில்லை. மர்மநபர் யாரோ மின்சார பஸ்சை கடத்தி சென்றது தெரிய வந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து திருமலை குற்றப்பிரிவு போலீசில் தேவஸ்தான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த மின்சார பஸ்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் கருவியை ஆய்வு செய்தபோது, கடத்தப்பட்ட மின்சார பஸ் 95 கிலோ மீட்டர் தொலைவில் நாயுடுப்பேட்டை அருகே இருந்ததைக் கண்டு பிடித்த போலீசார், உடனே நாயுடுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீவிர வாகன சோதனை

இதனையடுத்து நாயுடுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மராவ் சோமையா தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் போலீசாருக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மற்றொரு பிரிவு போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட மர்மநபர், நாயுடுப்பேட்டையில் இருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி மின்சார பஸ்சை இயக்கினார். ரோந்துப் போலீசார் மின்சார பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர்.

சார்ஜ் காலியானது

அந்த நேரத்தில் மின்சார பஸ்சில் பேட்டரி சார்ஜ் காலியானதாலும், ரோந்துப் போலீசார் அருகில் வந்ததாலும் மர்மநபர் மின்சார பஸ்சை நாயுடுப்பேட்டையை அடுத்த பிரதவாடா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவானார்.

சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார பஸ்சை போலீசார் மீட்டனர். அந்தப் பஸ்சின் மதிப்பு ரூ.2 கோடியாகும். தப்பியோடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருமலையில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதற்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரம்மோற்சவத்துக்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு பாதுகாப்பை மீறி மர்மநபர் மின்சார பஸ்சை கடத்திய சம்பவம் திருமலை, திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com