நாள் ஒன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஆயிரம் மடங்கு அதிகரிப்பு

கடந்த 2 மாதங்களில், நாள் ஒன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாள் ஒன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஆயிரம் மடங்கு அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

2 மாதங்களுக்கு முன்பு, நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் குறைவான கொரோனா பரிசோதனைகள்தான் செய்யப்பட்டன. ஆனால், இப்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. 2 மாதங்களில், இந்த எண்ணிக்கை ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கு ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், மருத்துவ கல்லூரிகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட குழுக்களே காரணம். கடந்த 20-ந் தேதி காலை 9 மணி நிலவரப்படி, மொத்தம் 25 லட்சத்து 12 ஆயிரத்து 338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ஒரு பாசிட்டிவ் (நோய் உள்ளது) மாதிரிக்கு, 20-க்கும் மேற்பட்ட நெகட்டிவ் (நோய் இல்லாதது) மாதிரிகளை பரிசோதித்து வந்துள்ளோம். கடந்த ஜனவரி மாதம், மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஒரே ஒரு பரிசோதனை கூடம் மட்டும் இருந்தது. தற்போது, நாடு முழுவதும் 555 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இது, இந்திய சுகாதார வரலாற்றில் ஒப்பற்ற சாதனை ஆகும்.

நமது பரிசோதனை திறன், மிகவும் வளர்ந்த நாடுகளுக்கு சமமாக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் நமது நிறுவனங்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக தேவைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com