ஜீவனாம்சம் கொடுக்காமல் இருக்க 2-வது மனைவியை தீர்த்து கட்டிய உளவு பிரிவு அதிகாரி

ஜீவனாம்சம் கொடுக்காமல் இருக்க 2-வது மனைவியை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டிய மத்திய உளவு பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஜீவனாம்சம் கொடுக்காமல் இருக்க 2-வது மனைவியை தீர்த்து கட்டிய உளவு பிரிவு அதிகாரி
Published on

ஆமதாபாத்,

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் விஜால்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீநந்தநகர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சில ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மணீஷா தூதெல்லா (வயது 47) அவர் என தெரிய வந்தது.

கொலைகாரர்களை போலீசார் தேடி வந்தனர். இதில், கலீலுதீன் சையது என்ற தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், மணீஷா படுகொலையை ஒப்பு கொண்டார்.

தொடர்ந்து விசாரித்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கொலையை செய்யும்படி மணீஷாவின் முன்னாள் கணவரான ராதாகிருஷ்ண மதூக்கர் தூதெல்லா சதி திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது.

2015-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து மதூக்கர் பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து பிளாட்டில் தனியாக வசித்த மணீஷாவை தீர்த்து கட்ட, தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் கொண்ட கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உள்ளார் மதூக்கர். அவர்களிடம் ரூ.1.5 லட்சம் பேரம் பேசியுள்ளார்.

இதன்பின்பு அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த மணீஷாவை கொலை செய்துள்ளனர். இதில், கொலையாளிகளை மதூக்கர் ஏவி விட்ட விவரம் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, போலீசார் மதூக்கரை நேற்று கைது செய்தனர். போலீசில் அவர் செய்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

3 திருமணங்களை செய்துள்ள மதூக்கருக்கு மணீஷா 2-வது மனைவியாவார். பிரிந்து வாழும் 2-வது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுத்து வந்துள்ளார் மதூக்கர். ஜீவனாம்சம் கொடுக்காமல் இருப்பதற்காக இந்த கொலையை செய்திருக்க கூடும் என மதூக்கர் மீது போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com