சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜையில் 10 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்
Published on

சபரிமலை,

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.

இந்நிலையில் இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாத பூஜை நாட்களில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் வலிய நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

பொதுவாக மாத பூஜை சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான போலீஸ் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது 170 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போலீசாரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கை பெட்டியை சுற்றியுள்ள பகுதியில், எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. மாத பூஜையில் வரலாறு காணாத கூட்டம் குவிந்ததை சமாளிக்க முடியாமல் போனதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீசனையொட்டி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சொல்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com