4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரம் பரிசு - ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு

மக்கள் தொகை குறைந்ததால் வருங்காலத்தில் மனித ஆற்றலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரம் பரிசு - ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு
Published on

ஐதராபாத்,

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது.

'நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போய் தற்போது 'நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறி வீட்டுக்கு ஒரு குழந்தை என்பது பரவலாகி விட்டது.

விழிப்புணர்வு, பொருளாதார சூழ்நிலை, கணவன்-மனைவி வேலைக்கு செல்வது போன்ற பல காரணங்களால் பெரும்பாலான தம்பதிகளும் ஒரு குழந்தையே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

மக்கள் தொகை குறைந்ததால் வருங்காலத்தில் மனித ஆற்றலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதாவது முதியவர்கள் அதிகமாகி இளைஞர்கள் குறைவாகி விடுவதைத்தான் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்கும் நிலையில், மக்கள் தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்களின் மக்களவை தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இதற்கிடையே ஆந்திர மாநில அரசு, 4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டையில் நடந்த விழாவில் இந்த அறிவிப்பை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

'மக்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எனது லட்சியம். செல்வத்தை உருவாக்கி ஏழைகளுக்கு பகிர வேண்டும். ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாடு வேண்டும் என்று சொன்னோம். ஆனால் இப்பொழுது பிள்ளைகள் தான் நமது செல்வம் என்று சொல்கிறோம்.

எனவே 3-வது குழந்தை பிறந்த உடனே தம்பதிகளுக்கு ரூ.30 ஆயிரம் கொடுப்போம். 4-வது குழந்தை பிறந்தவுடன் ரூ.40 ஆயிரம் பரிசாக கொடுக்கிறோம். பிள்ளைகளை பாரமாக நினைக்கக்கூடாது. அவர்கள்தான் நமது செல்வம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com