ஆந்திர பிரதேசம்: தந்தையின் கடனுக்காக 8-ம் வகுப்பு படிக்கும் மகளை கடத்தி, மிரட்டிய நபர்


ஆந்திர பிரதேசம்:  தந்தையின் கடனுக்காக 8-ம் வகுப்பு படிக்கும் மகளை கடத்தி, மிரட்டிய நபர்
x

சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பிரகாசம்,

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாச ராவ். திருப்பதியில் வேலை செய்து வருகிறார். இவர், திருப்பதியை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால், வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ஸ்ரீனிவாச ராவுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடனை வசூலிக்க ஈஸ்வர் ரெட்டி வேறுவித திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, ஸ்ரீனிவாச ராவின் மகள் படித்து வரும் பள்ளிக்கு சென்றார். மகளிடம், உன்னுடைய தந்தை என்னை அனுப்பி வைத்திருக்கிறார். உன்னை அழைத்து வர கூறினார் என்று கூறி சிறுமியை அழைத்து சென்றார். பைக்கில் அமர வைத்து, இனிப்பு வாங்கி விட்டு செல்வோம் என கூறி சென்றிருக்கிறார்.

அவர் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக ஓங்கோல் நகருக்கு வண்டியை ஓட்டி சென்றார். இதன்பின்னர், தொலைபேசி வழியே ஸ்ரீனிவாச ராவை தொடர்பு கொண்டு உன்னுடைய மகள் என்னிடம் இருக்கிறார். உடனே கடனை திருப்பி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மகளை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பள்ளி மாணவியின் பெற்றோர் சீமகுர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி சீமகுர்த்தி மாவட்ட காவல் ஆய்வாளர் சுப்பாராவ் கூறும்போது, பள்ளி மாணவியை கடத்தியதற்காக ஈஸ்வர் ரெட்டியை கைது செய்துள்ளோம். பணபரிமாற்றத்தின்போது, ஸ்ரீனிவாச ராவுடன் அவர் நட்பு ஏற்படுத்தி கொண்டார். தந்தையுடன் அடிக்கடி பார்த்ததில், மகளுக்கும் அவரை நன்றாக தெரிந்திருக்கிறது.

அந்த நம்பிக்கையை பயன்படுத்தி சிறுமியை கடத்தியிருக்கிறார். தனிப்படைகளை அமைத்து, அவரை கைது செய்திருக்கிறோம். வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டாள். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.

1 More update

Next Story