ஆந்திராவில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு - 17 பேர் மாயம்

ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 17 பேர் கதி என்ன? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
ஆந்திராவில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு - 17 பேர் மாயம்
Published on

விஜயவாடா,

தமிழ்நாட்டைப்போல அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக ஆனந்தபூர், கடப்பா, நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்மழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகவும் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, பெண்ணாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நெல்லூர் மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கரைபுரண்டு ஓடும் சுவர்ணமுகி நதியால் திருப்பதி உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. திருமலையை சூழ்ந்திருக்கும் பெருவெள்ளத்தால் திருப்பதிக்கு சென்ற ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து பெய்துவரும் பெருமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். அந்தவகையில் பஸ் கண்டக்டர் உள்பட 12 பேர் நேற்று முன்தினம் வரை பலியாகி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஆனந்தபூர் மாவட்டத்தின் காதிரி நகரில் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த மாவட்டத்தில் முதியவர் உள்பட மேலும் 2 பேரும், நெல்லூரில் விவசாயி ஒருவரும் நேற்று இறந்தனர். இவர்களை தவிர மேலும் பல இடங்களில் மழை-வெள்ளம் தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம் மாநிலத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. இதில் கடப்பா மாவட்டத்தில் மட்டுமே 13 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இதைத்தவிர பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 17 பேரின் கதி என்ன? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடற்படை, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் மாநில போலீசார், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோரும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் உள்ளனர்.

இதற்கிடையே கடப்பா, நெல்லூர், ஆனந்தபூர் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முற்றிலும் நிரம்பி, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள அணைகளையும் அவர் பார்வையிட்டார்.

மாநிலத்தில் மழை-வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கவும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com