

விசாகப்பட்டினம்
ஆந்திர பிரதேசத்தின் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தில் உள்ள வெலக வலசா கிராமத்தில் வசித்து வந்தவர் தடங்கா ரமேஷ் (வயது 30). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த கிராமத்தில் பலருக்கும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்கு ரமேஷ்தான் காரணம் என பலரும் சந்தேகம் கிளப்பினர். அவர், ஊர் மக்களுக்கு பில்லி சூனியம் வைத்ததால்தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கருதினர்.
இதனால், ஊர்மக்கள் சிலர் திரண்டு சென்று ரமேஷின் வீட்டுக்கு சென்றனர். அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு, தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் உயிரிழந்து விட்டார். இதனால், அதிர்ச்சியான அவர்கள் விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவரது உடலை எரித்து, தடயங்களை அழிக்கவும் முயன்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதி எரிந்த நிலையிலான ரமேஷின் உடலை மீட்டனர். இதுபற்றி ரமேஷின் சகோதரர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெண்கள், சிறுவர்கள் உள்பட 16 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.