

அமராவதி,
ஆந்திராவில் வகுப்புறைக்குள் புகுந்து பள்ளி மாணவியை ரம்பத்தால் தாக்கிய இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குள் கடந்த சனிக்கிழமை காலை புகுந்த 21 வயதான ஹேமந்த் தான் கொண்டு வந்த ரம்பத்தால் 10ம் வகுப்பு மாணவியை தாக்கினார். வகுப்பறையில் புகுந்த ஹேமந்த் மாணவியை ரம்பத்தால் தாக்கினார். தடுக்க முயன்ற மற்றொரு மாணவியையும் ரம்பத்தால் தாக்கினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 2 மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஹேம்ந்த் தாக்கிய முதல் மாணவி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான 10ம் வகுப்பு மாணவி ஹேமந்தின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மாணவியை ஒருதலையாக காதலித்த ஹேமந்த் தனது காதலை கூறியுள்ளார். உறவுக்காரன சிறுமியான அந்த மாணவி ஹேமந்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த் கடந்த சனிக்கிழமை ரம்பத்துடன் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியை தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவிகளை ரம்பத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய ஹேமந்த் ரப்தாடு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஹேமந்த் போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்றார்.
இதையடுத்து போலீசார் மீது தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ஹேமந்தை தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். ஹேமந்த் மீது போலீசார் 6 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஹேமந்தை கைது செய்த போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹேமந்திற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.