

பாலக்காடு,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரையை சேர்ந்தவர் சேவியர் (வயது 44). இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இவரது புதிய செருப்பை அந்த நாய், கடித்து குதறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சேவியர் அந்த நாயை அடித்து உதைத்தார். பின்னர் அதன் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிறை தனது ஸ்கூட்டரின் பின்புறம் கட்டினார்.
பின்னர் அந்த ஸ்கூட்டரில் தனது நண்பருடன் நாயை இழுத்துச்சென்றார். இதனால் நாயின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. வலியால் அந்த நாய் அலறியது. இருந்தபோதிலும் அதை கண்டுகொள்ளாமல் 4 கி.மீ. தூரம் ஈவு இரக்கம் இல்லாமல் இழுத்து சென்றார்.
இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டனர். இதைப்பார்த்த மிருக வதைதடுப்பு அதிகாரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவியரை கைது செய்தனர். காயம் அடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.