

புதுடெல்லி,
துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தொடர்ந்து கால தாமதம் நீடித்து வருகிறது. அவருடைய மரணம் தொடர்பான தகவல்கள் அவ்வபோது வெளியாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள தண்ணீர் நிரம்பியுள்ள தொட்டியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் சுயநினைவை இழந்தநிலையில் தடுமாறி தொட்டிக்குள் விழுந்தார். தண்ணீர் முழுவதுமாக நிரப்பப்பட்ட தொட்டியில் மூழ்கியதால் அவரால் எழுந்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கியதால் சுவாசம் தடை பட்டு அவர் உயிர் இழந்துள்ளார்.
அப்போது அவர் சிறிது மது அருந்தி இருந்ததற்கான சான்றுகள் அவரது ரத்த மாதிரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.
மேலும் அவரது மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை. எனவே இந்த மரணம் தண்ணீரில் மூழ்கியதால் நடந்த விபத்து என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு வேறு காரணம் தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகிய தகவல்களை கொண்டு சில ஊடகங்கள் மிகவும் மிகைப்படுத்தும் விதமான செய்தியை உணர்வற்ற முறையில் வெளியிடுவதாக திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகர் அமிதாப் பச்சன், வித்யாபாலன், அபிசேக் கபூர், சுவேதா பண்டிட், அனுபவ் சின்கா உள்ளிட்டோர் தங்களுடைய அதிருப்தியை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளனர். மீடியாக்களின் பரபரப்பை விமர்சனம் செய்து ஸ்ரீதேவியின் ரசிகர்களும் கண்டன செய்தியை பதிவிட்டு வருகிறார்கள்.
நாம் உயிரிழக்கும் போது நம்முடைய செய்திகள் எப்படி பரப்பப்படும் என்பது குறித்து நினைக்கையில் மிகவும் அச்சம் உண்டாகிறது, எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்திய தூதர்
ஸ்ரீதேவியின் அகால மரணம் விவகாரத்தில் மீடியாக்களின் ஆர்வமானது புரிந்துக்கொள்ளமுடிகிறது. ஆனால், அதிதமான யூகங்கள் என்பது உதவி செய்யாது என தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார் இந்திய தூதர் நவ்தீப் சூரி.
ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு மிகவும் விரைவில் கொண்டு செல்வதை உறுதிசெய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். நாங்கள் எங்களுடைய பணியை செய்து வருகிறோம். ஸ்ரீதேவி மற்றும் அவருடைய நலம் விரும்பிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அவர்களுடைய வலியை நாங்கள் பகிர்ந்துக் கொள்கிறோம். எங்களுடைய அனுபவத்தின்படி இதுபோன்ற சம்பவங்களில் விதிமுறைகளை முடிக்க 2-3 நாட்கள் பிடிக்கும் என்பதாகும். உயிரிழப்பிற்கு காரணத்தை தீர்மானிப்பதை வல்லுநர்களிடம் விட்டுவோம். நாம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய டுவிட்டரில் நவ்தீப் சூரி கூறிஉள்ளார்.