

பணியிடமாற்ற ஊழல்
மராட்டியத்தில் போலீஸ் அதிகாகள் பணியிடமாற்றம் மற்றும் நியமனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ. மாநில அரசின் தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே, போலீஸ் டி.ஜி.பி. சஞ்சய் பாண்டேவுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து மராட்டிய அரசு, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது. மனு மீதான விசாரணை நீதிபதி நிதின் ஜாம்தர், எஸ்.வி. கோட்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
ஏன் சிபாரிசு செய்தார்?
அப்போது மாநில அரசு தரப்பில் கோர்ட்டில், அனில் தேஷ்முக் மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்தபோது நடந்த போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம், நியமனம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அப்படியென்றால் அந்த பணியிடமாற்றம், நியமனங்களுக்கு இருதயமாக இருந்த அப்போதைய மராட்டிய டி.ஜி.பி. சுபோத் குமார் ஜெய்ஸ்வாலிடம் (தற்போதைய சி.பி.ஐ. இயக்குனர்) தான் விசாரிக்க வேண்டும்.
அதிகாரிகள் பணியிடமாற்றம், நியமனம் தொடர்பாக நடந்த எல்லா கூட்டங்களிலும் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கலந்து கொண்டு உள்ளார். ஏன் இந்த பணியிடமாற்றங்களுக்கு சிபாரிசு செய்தார் என சி.பி.ஐ. சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை கேட்க முடியாதா?. சி.பி.ஐ. அவர்களது இயக்குனருக்கே சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்.
குற்றவாளியாக இருக்க வாய்ப்பு
இந்த வழக்கில் சி.பி.ஐ. இயக்குனரே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு இருக்கும் போது நியாயமான விசாரணை நடக்காது. எனவே இந்த வழக்கு மீதான விசாரணை ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது தகுதியானவர் தலைமையில் நடக்க ஒருவரை ஐகோர்ட்டே நியமிக்க வேண்டும்." என கூறப்பட்டது. இதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் மாநில அரசின் வாதம் குறித்து பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு விசாரணையை 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.