"மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - அன்னா ஹசாரே வலியுறுத்தல்

மணிப்பூர் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, மணிப்பூரில் கலவரத்தின் போது 2 பெண்களை ஒரு தரப்பு ஆண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும் ஊழலுக்கு எதிரான போராட்ட வீரருமான அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இது மனித குலத்தின் மீதான கறை. பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நான் கூறுவேன். பெண்கள் நம் தாய்மார்கள், சகோதரி. குறிப்பாக நமது எல்லையில் தேசத்துக்கு சேவையாற்றிய ராணுவ வீரரின் மனைவிக்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படுவது மிகவும் வேதனைக்குரியது" என்று அன்னா ஹசாரே கூறினார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கவும், விவாதம் நடத்தவும் உள்துறை மந்திரி தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com