பிட்காயின் முறைகேடு வழக்கில் பஞ்சாப்பில் மேலும் ஒரு ஹேக்கர் கைது

கர்நாடகத்தில் பிட்காயின் முறைகேடு வழக்கில் பஞ்சாப்பில் மேலும் ஒரு ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கர்நாடக அரசு இணையதளத்தை முடக்கி ரூ.1½ கோடி சுருட்டியதும் அம்பலமாகி உள்ளது.
பிட்காயின் முறைகேடு வழக்கில் பஞ்சாப்பில் மேலும் ஒரு ஹேக்கர் கைது
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிட்காயின் விவகாரமும், அரசு இணையதளம் முடக்கப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக முதலில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான 31 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து விட்டார். ஆனால் பிட்காயின் முறைகேடு, அரசு இணையதளத்தை முடக்கிய விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். இதையடுத்து, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்ததில், ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சில ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் மீதே பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்தும் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தார்கள்.

ஆனால் பிட்காயின் முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை பாதுகாக்க பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஸ்ரீகிருஷ்ணா மாற்றி இருந்தார். பஞ்சாப், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா மாற்றி இருந்ததும் சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு தெரியவந்தது. இந்த நிலையில், பிட்காயின் முறைகேட்டில் மேலும் ஒரு ஹேக்கரை பஞ்சாப்பில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வைத்து ராஜேந்திர சிங் என்பவரை சிறப்பு விசாணை குழு போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கர்நாடக அரசின் இணையதளத்தை முடக்கி, ரூ.1 கோடியை சுருட்டியது தெரியவந்துள்ளது.

அவர் ஸ்ரீகிருஷ்ணாவுடன் சேர்ந்து இணையதளத்தை முடக்கி ரூ.1 கோடியையும் வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான ராஜேந்திர சிங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கைதாகி இருப்பதன் மூலம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com