

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஆயிஷா நகர் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் குடோனில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்த பட்டாசு குடோன் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக பட்டாசு குடோன் நடத்தி வந்த நபரை தேடுவதற்காக, டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்திற்கு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜெய்ப்பூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது, அதே பகுதியில் மற்றொரு பட்டாசு ஆலை சட்டவிரோதமாக இயங்கி வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஆலைக்கு சீல் வைத்து, அங்குள்ள பொருட்களை கைப்பற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.