உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார்.
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
Published on

லக்னோ,

அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அங்கே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில மந்திரிகள் தங்கள் கட்சியை விட்டு வெளியேறி எதிரணியில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இதில் முக்கியமாக ஆளும் பா.ஜனதா அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரை தொடர்ந்து மேலும் 3 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இருந்து விலகினர். அவர்களும் சமாஜ்வாடியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதைப்போல காங்கிரஸ், சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் இருவர் நேற்று தங்கள் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர்.

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் மந்திரி சபையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்த தாரா சிங் சவுகான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

இதை செய்தியாளர்களிடம் உறுதி செய்த அவர், தற்போதைய அரசில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அடிமட்டத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். இதுவே தனது விலகலுக்கு காரணம் எனவும் கூறினார்.

சமாஜ்வாடி கட்சியில் இணைவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தனது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சியில் இருந்து மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளியேறி வருவது பா.ஜனதாவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com