சர்ச்சைக்கு இன்னொரு பெயர்...!

நாடாளுமன்ற மக்களவையில் 25-ந் தேதி அனல் வீசிக்கொண்டிருந்தது. முத்தலாக் தடை மசோதாவை மூன்றாவது முறையாக அறிமுகம் செய்த மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, இம்முறையாவது அதை சட்டமாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.
சர்ச்சைக்கு இன்னொரு பெயர்...!
Published on

முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு எழுந்தார், அசம்கான்.

அசம்கான்- பெயரைச் சொன்னாலே உத்தரபிரதேசம் அலறும். முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர் வாயைத் திறந்தாலே சர்ச்சை- ஏவுகணையாக வந்து விழும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக களம் கண்டவர், நடிகை ஜெயபிரதா. அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. ஜெயபிரதாவா, அசம்கானா என நாடே கேள்வி எழுப்பியது.

அந்த பரபரப்பில் ராம்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் போட்ட குண்டு, தேர்தல் கமிஷனையே அலற வைத்தது.

அப்படி என்ன சொல்லி விட்டார் என்கிறீர்களா?

ஜெயபிரதாவை ராம்பூருக்கு அழைத்து வந்ததே நான்தான்... அவரது உடலை யாரும் தொட நான் அனுமதித்ததே இல்லை... அவரது உண்மையான முகத்தைக் காண்பதற்கு உங்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது.. ஆனால் நான் 17 நாளிலேயே.............. என தொடர்ந்து அவர் பேசிய சர்ச்சை பேச்சால் 3 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் கமிஷன்.

ஆனாலும் ஜெயபிரதாவை 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காட்டினார், அசம்கான்.

அப்படிப்பட்ட அசம்கான், முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் என்ன பேசப்போகிறாரோ என அனைவரும் பரபரப்பில் இருக்க அவர் பேசத்தொடங்கினார். அப்போது சபையை சபாநாயகர் இருக்கையில் இருந்து நடத்தியவர் பாரதீய ஜனதா பெண் எம்.பி. ரமா தேவி.

அசம்கான் ஆரம்பத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்துகிற விதத்தில், ஆளும் கட்சி எம்.பி. ஒருவரைப் பார்த்து சில கருத்துகளை கூற தொடங்க, அப்போது சபையை வழிநடத்திய ரமாதேவி, அவரை சபாநாயகர் இருக்கையை நோக்கி பேச வேண்டும் என்று சொல்ல, அங்கே வில்லங்கம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

70 வயதைக் கடந்த அசம்கான், ரமாதேவியைப் பார்த்து அப்போது சொன்ன வார்த்தைகள், ஒட்டுமொத்த சபையையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. சபையில் இருந்த மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத்துக்கும், அர்ஜூன் ராம் மேக்வாலுக்கும் ரத்த அழுத்தம் எகிறியது. அசம்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசப்பட்டனர்.

ரமாதேவியோ பொறுமையுடன், இப்படி பேசுவது முறையல்ல... சபை குறிப்பில் இருந்து இதை நீக்குங்கள் என்றார். உடனே அசம்கான், நான் உங்களை அவமரியாதையாக கூறவில்லை. நீங்கள் என் அன்பு சகோதரி மாதிரி என்று சமாளிக்க எதிர்ப்பு குரல் வலுத்தது. உடனே அவர் அருகில் இருந்த அவரது கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவும், அசம்கானுக்கு ஆதரவாக பேச எழுந்தார். அப்போது அவருக்கு எதிராகவும் குரல் எழுந்தது.

அந்த நேரம் சபாநாயகர் ஓம்பிர்லா வந்தார். அவர் இரு தரப்பையும் கவனித்தபோது, தனக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி வெளிநடப்பு செய்தார். என்னை அவமதிக்கிறபோது நான் பேச முடியாது என்று சொல்லி அசம்கானும் வெளியேற இந்த விவகாரம் ஊடகங்களில் வைரலானது.

பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் அப்தாப் அத்வானி, அசம்கானின் தலையை எடுக்க வேண்டும் என்று கொதித்தார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மீண்டும் இந்த விவகாரத்தில் புயல் வீசியது. பாரதீய ஜனதா பெண் எம்.பி. டாக்டர் சங்கமித்ரா மவுரியா, அசம்கானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மக்களவை தி.மு.க. குழு துணைத்தலைவர் கனிமொழி என கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுத்தனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். உங்களுக்கு போதிய அதிகாரம் இருக்கிறது. நாங்கள் உங்களை மதிக்கிறோம். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு முன்மாதிரியான நடவடிக்கை வேண்டும் என்றுதான் உங்களிடம் வந்திருக்கிறோம். இனி எந்தவொரு பெண்ணுக்கும் இப்படி மோசமாக நடத்தப்படுகிற நிலை வரக்கூடாது என கணீர் குரலில் கூறினார்.

சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், இன்றைக்கு நாட்டின் ஜனநாயகம் சபையில் ஒளிர்கிறது. குறுகிய காலத்தில் ஒரு உயர்ந்த கவுரவத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். சபையில் நடந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. நானும் சபையில் இருந்தேன். அந்த அவமதிப்பை ரமாதேவி சகித்து கொண்டதை பாராட்டுகிறேன். ஆனால் இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரு செய்தி கிடைக்க வேண்டும் என்றார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்துக் கட்சி தலைவர்களையும் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்.

அந்த நடவடிக்கை, அசம்கான் மட்டுமல்ல, யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்கின்றன நாடாளுமன்ற வட்டாரங்கள்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com