பிளஸ்-1 மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


பிளஸ்-1 மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

பிளஸ்-1 மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இவன் தனது செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலியை பதிவிறக்கம் செய்திருந்தான். அதன் மூலம் 14 பேர் அறிமுகமாகினர்.

அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சிறுவனை கட்டாயப்படுத்தியதோடு, அதற்கு பணம் தருவதாக கூறி கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விடுதிகள், வீடுகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் செந்தாரா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சிறுவனுக்கு 2 ஆண்டுகளாக 14 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கோழிக்கோடு பேக்கல் கல்வி மாவட்ட துணை கல்வி அதிகாரி சைனுதீன், பாலக்காடு ரெயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி சித்திரை ராஜ் எரவில் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பிற மாவட்டங்களிலும் நடந்து உள்ளதால், அங்குள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான 5 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணூர் மாவட்டம் பையண்ணூர் பகுதியை சேர்ந்த தொழிலாளியான கிரிஷன் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் தலைமறைவான திருக்கரிப்பூரை சேர்ந்த சிராஜுதீன் (46), பெரும்பா பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story