கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு

கேரளாவில் மேலும் ஒருவர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதித்து தாமரைச்சேரி பகுதியை சோந்த 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை, கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண், வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 45 வயது நபர், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது பெண், 51 வயது நபர் ஆகிய 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தநிலையில், அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்த ஆண் ஒருவர், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, அங்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து நேரில் ஆய்வு செய்தார். அதோடு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில், பாலக்காட்டை சேர்ந்த ஒருவர் அமீபா மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இந்த மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ததில், அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த நோய்க்கு சிறந்த உயரிய சிகிச்சை கேரளாவில் அளிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் இந்த நோய் உள்ளது. இதற்கு முன்பும் கேரளாவில் நோய் பரவி இருந்தது. தற்போது கேரளாவில் தீவிரமான மருத்துவ பரிசோதனை மூலம் தகவல்கள் வெளியே தெரிய வருகின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

அமீபா மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டால், தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை வழங்கும் நோய் தடுப்பு அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com