மெகுல் சோக்‌ஷி எதிராக ‘பாதகமான தகவல் எதுவும் இந்தியா வழங்கவில்லை’ ஆன்டிகுவா தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக ‘பாதகமான தகவல் எதுவும் இந்தியா வழங்கவில்லை’ என ஆன்டிகுவா தெரிவித்துள்ளது. #PNBfraud #MehulChoksi
மெகுல் சோக்‌ஷி எதிராக ‘பாதகமான தகவல் எதுவும் இந்தியா வழங்கவில்லை’ ஆன்டிகுவா தகவல்
Published on

புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மெகுல் சோக்ஷி ஜூலை மாதம் கார்பியன் தேசமான ஆன்டிகுவாவிற்கு சென்று, உள்ளூர் பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை நாடியுள்ள சிபிஐ, மெகுல் சோக்ஷிக்கு எதிராக இன்டர்போல் வெளியிட்ட நோட்டீஸை குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார், அவர்களுடைய நகர்வு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பான தகவலை அளியுங்கள் என கேட்டது. இந்நிலையில் ஆன்டிகுவா அரசு, மெகுல் சோக்ஷிக்கு குடியுரிமை வழங்கியதால் அந்நாட்டு எதிர்க்கட்சிகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஆன்டிகுவா நாட்டின் முதலீடு செய்யும் போது கிடைக்கும் சலுகையின் மூலம் விசாவை பெற்றுள்ளார் மெகுல் சோக்ஷி.

இதனையடுத்து வங்கி மோசடியில் மெகுல் சோக்ஷி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது தெரிந்து இருந்தால் நாங்கள் குடியுரிமை வழங்கியிருக்க மாட்டோம் என ஆன்டிகுவா தெரிவித்தது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி மெகுல் சோக்ஷியை கைது செய்யுமாறு ஆன்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் அவருக்கு குடியுரிமை வழங்க இந்தியாதான் தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக ஆன்டிகுவா அரசு கூறியுள்ளது. முதலீடு சார்ந்த குடியுரிமைக்காக 2017 மே மாதம் சோக்ஷி விண்ணப்பித்த போது, ஆன்டிகுவா குடியேற்ற விதிமுறைகளின்படி உள்ளூர் போலீசின் அனுமதி கடிதத்தை அந்நாட்டு குடியேற்றத்துறை முதலீட்டுப்பிரிவு (சி.ஐ.யு.) கேட்டுள்ளது.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் மும்பை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் மூலம் தடையில்லா சான்றிதழை பெற்று போலீசார் அளித்துள்ளனர். அந்த சான்றிதழில் சோக்சி குறித்து பாதகமான எந்த தகவலும் இடம்பெறவில்லை என சி.ஐ.யு. கூறியதாக ஆன்டிகுவா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அதேநேரம், சோக்ஷியின் குடியுரிமை தொடர்பாக எந்த கடிதமும் ஆன்டிகுவாவில் இருந்து வரவில்லை என செபி (இந்திய பங்குச்சந்தை மற்றும் பங்கு வர்த்தக பரிமாற்று ஆணையம்) கூறியுள்ளது. இந்தியர்கள், ஆன்டிகுவாவின் முதலீடு சார்ந்த குடியுரிமை பெற செபியின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com