

புதுடெல்லி,
தென்மும்பை பகுதியில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் கடந்த மாதம் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. தானேயை சேர்ந்த ஹிரன் மன்சுக் என்பவரின் காரை திருடி மர்மநபர்கள் வெடிப்பொருட்களை வைத்து முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தி சென்றதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் கடந்த வாரம் தானே கழிகமுகப்பகுதியில் ஹிரன் மன்சுக் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. ஹிரன் மன்சுக் மரணத்தில் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதேபோல ஹிரன் மன்சுக்கின் மனைவியும் தனது கணவரது மரணத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சச்சின் வாசே குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து மக்கள் குறைதீர்ப்பு மையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டா.
இந்தநிலையில் ஹிரன் மன்சுக் கொலை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் அதிகாரி சச்சின் வாசே தானே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், " கொலை வழக்கில் எந்த நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நான் நீண்ட காலமாக தானேயில் வசித்து வருகிறேன். நான் உயிரிழந்தவரின் வாடிக்கையாளர் மற்றும் தெரிந்தவராக இருந்த போதும், அவரை கொலை செய்வதற்கு எந்த காரணமும் என்னிடம் இல்லை என்பது முதல் தகவல் அறிக்கையை படித்தால் தெரியும். ஹிரன் மன்சுக் மரணம் ஏற்பட்டதாக கூறப்படும் நேரத்தில் நான் டோங்கிரி பகுதியில் இருந்தேன் " என கூறப்பட்டு இருந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் சச்சின் வாசேவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோர்ட்டு, சச்சின் வாசே மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே 'உலகை விட்டு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது' என போலீஸ் அதிகாரி சச்சின் வாசே வைத்திருந்த வாட்ஸ்அப் பதிவாலும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் அவர், " 2004 மார்ச் 3 ந் தேதி சக சி.ஐ.டி. போலீசார் பொய் வழக்கில் என்னை கைது செய்தனர்.
இதுவரை அந்த கைதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வரலாறு மீண்டும் திரும்பும் என உணருகிறேன். எனது சக அதிகாரிகள் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க உள்ளனர். ஆனால் தற்போது சூழல் வேறுவிதமாக உள்ளது. அப்போது எனக்கு 17 ஆண்டுகள் நம்பிக்கை, பொறுமை, வாழ்க்கை, பணிக்காலம் இருந்தது. ஆனால் தற்போது என்னிடம் 17 ஆண்டுகால பணிக்காலமோ, வாழ்க்கையோ, பொறுமையோ இல்லை. உலகை விட்டு செல்வதற்கான நேரம் நெருங்கி வந்துவிட்டதாக நினைக்கிறேன் "இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.