போருக்கு எதிர்ப்பு; ரஷிய சாலட்டை மெனுவில் இருந்து நீக்கிய கேரள உணவு விடுதி

கேரள உணவு விடுதி ஒன்று உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷிய சாலட்டை தனது மெனுவில் இருந்து நீக்கியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கொச்சி,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷியா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் கூறிய போதிலும், உக்ரைனில் உள்ள ரஷியர்கள் பாதுகாப்புக்கான ராணுவ நடவடிக்கை என ரஷியா கூறி வருகிறது. கேரளாவில் உள்ள உணவு விடுதி ஒன்று போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான நடவடிக்கையை எடுத்து உள்ளது.

கேரளாவின் கொச்சி நகரில் காஷி ஆர்ட் என்ற பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், உள்ளூர் உணவுகளுடன், ஐஸ்கிரீம், சாலட் போன்ற வெளிநாட்டு உணவுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் ரஷியாவில் பிரசித்தி பெற்ற சாலட் ஒன்றும் இந்த விடுதியில் விற்கப்பட்டு வந்தது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து உள்ள சூழலில், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த உணவு விடுதி ரஷிய சாலட்டை மெனுவில் இருந்து நீக்கி உள்ளது. அதுபற்றிய தகவலை பலகை ஒன்றில் எழுதி, அதனை விடுதியின் வாசலில் வைத்து உள்ளனர். இதுபற்றி அதன் உரிமையாளர் எட்கார் பின்டோ கூறும்போது, இது ஒரு வகையில் போருக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையாகும். இது எந்த வகையிலும் விளம்பரத்திற்காக அல்ல. போர் வேண்டாம் என எளிய முறையில் தெரிவிக்க விரும்பினோம். இது ரஷியர்களுக்கு எதிரானது அல்ல. போருக்கு எதிரானது என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com