

புதுடெல்லி,
தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்ட கேரள அரசு இதற்காக தேசிய புலிகள் காப்பகத்தில் அனுமதியும் பெற்றது. ஆனால் அந்த பகுதி முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால், கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்ட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அத்துடன், வாகன நிறுத்துமிடம் கட்ட தடை விதிக்கக்கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாயம் கடந்த 15-ந் தேதி தமிழக அரசின் மனுவை நிராகரித்து, கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறப்பட்டதாவது:-
கேரள அரசு திட்டமிட்டுள்ள வாகன நிறுத்துமிடம் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்திட்டம் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளைவிப்பது மட்டுமின்றி 5 மாவட்ட மக்களின் குடிநீர், பாசனம் ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும்.
வாகன நிறுத்துமிடம் கட்டப்படும் இடம் 1886-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற ஒரு உத்தரவை பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ளது சட்டத்துக்கு எதிரானதாகும்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் எந்த வகையான கட்டுமான செயல்பாடுகளையும் அனுமதிக்கக்கூடாது என்ற அடிப்படை விதியை பசுமை தீர்ப்பாயம் கவனிக்க தவறியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் அமைந்த தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வரவால் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகின்றன. இதனால் அணையின் வடமேற்கு பகுதியில் எரிபொருள் கழிவுகள் ஆகியவை குவிய அதிக வாய்ப்புள்ளன. இவை அந்த பகுதியின் மண்ணை பாழ்படுத்தும் ஆபத்து உள்ளது. அப்பகுதியில் தண்ணீர் மற்றும் காற்று மாசுபடும் ஆபத்தும் உள்ளது.
எனவே, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வாகன நிறுத்துமிடம் கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.