

ஜனாதிபதியிடம் மனு
கவர்னர் மாளிகைக்கும், அமைச்சரவைக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இ்ந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி மீது முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர். அரசின் அன்றாட நடவடிக்கைகளிலும், நிதி நிர்வாகத்திலும் தலையிட்டு கவர்னர் முட்டுக்கட்டை போடுவதாகவும், அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டெல்லி சென்று கவர்னர் கிரண்பெடியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மின்னணுமயம்
கடந்த சில ஆண்டுகளில் புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் 4 முதன்மை மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டு சில குறிப்பிட்ட பிரிவினரிடையே பகுத்தறிவை உருவாக்கியுள்ளன. இத்தகைய மாற்றங்கள் தனிநபர் கட்டுப்பாட்டை உடைத்து நேரடியான, வெளிப்படையான மற்றும் பொறுப்பினை ஏற்கத்தக்க இந்த அரசை உருவாக்கி யுள்ளது.
முதல் முக்கியமான மாற்றமாக அனைத்து நிதி பரிமாற்றங்கள் மின்னணு மயமாக்கப்பட்டன. அனைத்து கொள்முதல்களும், ஒப்பந்த புள்ளிகளும் இணையதளம் மூலம் குறைந்த விலை குறியீட்டுடன் செய்யப்படுகின்றன. அனைத்து நிதி செலுத்துதல்களும் வங்கியின் மின்னணு பரிவர்த்தனையில் நடக்கின்றன.
ஒருதலைபட்சமான...
பல்வேறு உறுப்பினர்களை கொண்ட ஒரு குழு மூலமே குறிப்பிட்ட ஒப்பந்த புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால் சிபாரிசு மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தடுக்கப்பட்டு தரமான மற்றும் குறைந்த ஏலத்தொகை உறுதி செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புகள் இல்லாமல் அனைத்தும் ஆவணப் படுத்தப்படுகின்றன. விலைகள் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன. விவரங்களை மறைப்பதுமில்லை.
2-வது அனைத்து நலநிதிகள், ஊக்கத்தொகைகள் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது. அதுபோலவே உதவித்தொகைகள், மானியங்கள், ஓய்வூதியங்கள், நுகர்பொருட்கள் மற்றும் பரிசுகளும் யாருடைய தலையீடுமின்றி வழங்கப்படுகின்றன. இத்தகைய செயல்கள் இடைத்தரகர் களுக்கு வழங்கப்படும் ஒரு தலைபட்சமான சலுகைகளை தடுக்கின்றன. தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய பயன்களை பெறுகின்றனர்.
அதிகார வரம்பு
3-வது எந்த நேரமும் யூனியன் பிரதேச சட்டத்தின்படி பொதுநிதி விதிமுறைகள் மற்றும் வியாபார நிதி சட்டங்கள் ஆகியவற்றின்படி கவர்னருக்கான அதிகாரமும், பொறுப்புகளும் கேள்விக் குரியதாக்கப்பட்டன. சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களால் கவர்னரின் அதிகாரவரம்பு உறுதி செய்யப்பட்டது. 4-வது முன்பு இல்லாத வகையில் அன்றன்றைய செய்திகளை அனைத்து பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒழுங்குபடுத்தி தருவதில் சமூக ஊடகங்களின் அதிகபட்ச பயன்பாடுகள் உள்ளன. ஆகையால் எந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக அறியப்படுகிறது. அனைத்து துறைகளிலும் மேம்படுத்தப்பட்ட தரவுகள் நேரடியாக இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கும்போது வருத்தம் கொள்ள வேண்டியதிருக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.