ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x

புதிய வரையறை சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குச் சாதகமாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாக ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. இது குஜராத், ராஜஸ்தான், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் முழுவதுமாகப் பரவி உள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதப் பகுதியில் இந்த மலைத்தொடர் பரவி இருக்கிறது. நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் 22 வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்ற அனைத்தையும் தாங்கி இந்த மலைத்தொடர் நிலைத்து வருகிறது.

ஆரவல்லி மலைத்தொடரில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த மலைக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதி எது என்பதில் வெவ்வேறு விதமான வரையறைகள் உள்ளன. எனவே, இந்த வரையறைகள் ஆரவல்லி மலைத்தொடர் முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘மலைத்தொடர்’ என்றால் எது என்பதற்கு புதிய வரையறையை வழங்கியது. அந்த புதிய வரையறைப்படி, தரை மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரம் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட பகுதிகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராகக் கருதப்படும் என குறிப்பிடப்பட்டது.

அதேபோல், இரண்டு குன்றுகளுக்கு இடையில் குறைந்தது 500 மீட்டர் இடைவெளி இருந்தால்தான் அது மலைத்தொடராகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தாக்கல் செய்த இந்த வரையறையை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது. இந்த புதிய வரையறை சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குச் சாதகமாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீதம் அழிந்துவிடும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான முந்தைய உத்தரவை இடைநிறுத்தம் செய்துள்ளது. மேலும், ஆரவல்லி மலைத்தொடரின் எந்தெந்த பகுதிகள் ‘காடுகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் எந்த அடிப்படையில் புதிய வரையறை உருவாக்கப்பட்டது என்பதைக் குறித்து தெளிவான விளக்கங்களை அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 More update

Next Story