

ஹோசியாபூர்,
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்டத்தில் பேராயராக பணியாற்றி வந்த பிராங்கோ மூலக்கல் என்பவர் மீது கற்பழிப்பு குற்றம்சாட்டி கோட்டயம் நகர போலீசில் புகார் செய்தார்.
2014-ம் ஆண்டு குருவிலாங்காட்டில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் வைத்து தன்னை பலமுறை கற்பழித்ததாக அவர் அதில் கூறி இருந்தார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை பேராயர் பிராங்கோ மறுத்தார். இதற்கிடையே பேராயர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசார் பிராங்கோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கில் பஞ்சாப் மாநிலம் ஹோசியாபூர் மாவட்டம் தசுயா நகரில் பாதிரியாராக பணியாற்றிய குரியகோஸ் கட்டுத்தாரா(வயது 62) என்பவர் பேராயர் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மயக்கமடைந்த நிலையில் குரியகோஸ் தனது அறையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குரியகோசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருடைய மரணம் மர்மமரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் இதுபற்றி கூறுகையில், பாதிரியார் குரியகோசின் உடலின் வெளிப்பகுதியில் எந்த காயமும் தென்படவில்லை. அவர் தனது அறையில் சுயநினைவை இழந்த நிலையில் கிடந்தார். அவருடைய மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும். இதற்காக குரியகோசின் குடல் பகுதி முழுமையான பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, கேரளாவில் குரியகோசின் உறவினர்கள், பேராயருக்கு எதிராக சாட்சி சொன்னதில் இருந்து குரியகோஸ் தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் இருந்து வந்தார். எனவே, பாதிரியாரின் உடல் பிரேத பரிசோதனையை ஆலப்புழா அரசு மருத்துவமனையில் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.