நாடு முழுவதும் ஏ.டி.எம்.கள் மூடப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்

ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஏ.டி.எம்.கள் மூடப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதற்கிடையில், இந்தியாவில் ஏ.டி.எம். மையங்களை மூடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதில், ரான்சம்வேர் என்ற வைரஸ் மூலம் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துவதால் அடுத்த 2-3 நாட்களுக்கு ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் வாயிலாக எந்த பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என்றும், DANCE OF THE HILLARY என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் வீடியோவை திறக்க வேண்டாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பி.பி.சி. வானொலியில் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பலரும் இதை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த செய்தி போலியானது என்றும், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சரிபார்க்கப்படாத வாட்ஸ்ஆப் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com